Advertisment

ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்: ரஜினி, ரஜினியாக இருப்பது தான் ஈர்ப்பு!

மக்களுக்காக உயிரை மாய்த்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் தலைவராக தகுதி இல்லாதவர்களா? ரஜினியை விட்டால் நமக்கு வேற ஆளே இல்லையா...?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்: ரஜினி, ரஜினியாக இருப்பது தான் ஈர்ப்பு!

ரஜினிகாந்த் பிறந்தநாள்

ஆசிரியர்: அன்பரசன் ஞானமணி

Advertisment

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒருவித மயக்கமும், ஈர்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.. இதுதான் இம்மனிதனின் வெற்றி ரகசியம். அந்த ரகசியத்தை அவர் எழுதவில்லை. அவர் இருப்பதாய் நம்பும் கடவுள் எழுதியிருக்கலாம். அல்லது 'இருந்தா நல்லா இருக்கும்-னு' சொல்ற கமல்ஹாசனின் கூற்றுப்படி பகுத்தறிவாளிகளுக்கே புரியாத புதிராக இருக்கலாம்.

சினிமா எனும் மாயக் கண்ணாடியில் பல மாய வித்தைகளை செய்து இன்று 'உச்ச நட்சத்திரம்' எனும் அந்தஸ்துக்கு உயர்ந்திருப்பவர் ரஜினி. எம்.ஜி.ஆர் காலத்தில் ஆந்திராவில் என்.டி.ராமாராவை அந்த மாநில மக்கள் வீட்டில் அவரது படத்தை வைத்து தெய்வமாகவே வழிபடுவார்களாம். ஆனால், அவரிடம் கூட இல்லாத ஒரு கவர்ச்சி ரஜினியிடம் உள்ளது. இவ்வளவு ஏன், இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கண்ணா தொடர்ந்து சோலோவாக 15 ஹிட் படங்களை கொடுத்தவர். இந்திய சினிமாவில் இன்றளவும் இது வேறு எந்த ஹீரோவாலும் முறியடிக்கப்பட முடியாத சாதனையாக உள்ளது. அவரிடம் இல்லாத காந்த சக்தியா ரஜினியிடம் உள்ளது? என்று கேட்டால், ஆம் என்று தான் பதில் சொல்ல முடியும்.

அது எப்படி, இவர்களை விட ரஜினி அதிக மக்கள் ஈர்ப்பு கொண்டவர் என கூறமுடியும்? என்று நீங்கள் கேட்டால், 67 வயதான ஒரு முதியவரை வைத்து 400 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள் என்றால், இதைவிட வேறு என்ன பதிலை நாம் சொல்ல முடியும்...! அதுதான் ரஜினி...! பாபா படத்தில் 'எல்லாம் மாயா' என்று ரஜினி பாடுவாரே, அதுபோல் இதுவும் மாயா தான். ஆனால், நிஜத்தில் கண்ணுக்கு தெரியும் மாயா. யாருக்கும் பிடிபடாத மாயா. ஏன்..ரஜினிக்கே புரியாத மாயா இது.

ரஜினியின் கண்கள், சிரிப்பு, பேச்சு, நடை, தலைமுடி, உயரம், எடை என சகலமும் அவரை ரசிக்க வைக்கிறது. இல்லை..இல்லை.. சென்னையை எப்போதும் விரும்பும் வெள்ளத்தைப் போல நம்மை ஈர்க்கிறது. மேலே நான் சொன்ன கண்கள் தொடங்கி எடை வரை அனைத்து ஹீரோவிடமும் நாம் ரசிக்க முடியும். ஆனால், அவையெல்லாம் விட்டில் பூச்சிகள் போல, சில காலத்திற்கு தான். ஆனால், வயசானாலும், ஒரு முதியவரின் ஸ்டைலையும், அழகையும் இன்னும் மக்கள் ரசிக்கிறார்கள் என்றால் அது தான் நான் சொல்லும் காந்த சக்தியின் அர்த்தம்.

ரஜினியை பொறுத்தவரை அழகு என்பது, தோற்றக் கவர்ச்சி அல்ல. அதை 'கடவுளின் கவர்ச்சி' என்று கூறலாம். கடவுளை நாம் நேசிப்பதற்கு என்ன காரணம் கூறமுடியும்? அதற்கு பதிலே நம்மிடம் கிடையாது. அந்த பதில் காற்றைப் போல.. அதை பிடிக்கவும் முடியாது, தேடவும் முடியாது. அதுபோலத் தான் ரஜினியின் மக்கள் கவர்ச்சியும். இங்கே யார் வேண்டுமானாலும் ஸ்டைல் பண்ண முடியும். ஆனால், அந்த ஸ்டைலை ஸ்டைலாக செய்ய ரஜினியால் மட்டுமே முடிகிறது.... அவருக்கு தான் அது வருகிறது. இதன் மூலம், கடவுள் இருக்கிறார் என்று கூட நாம் நம்பலாம்.

தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்தே தீரும். ரஜினி என்கிற கவர்ச்சி பிம்பம் அபூர்வ ராகங்களில் தொடங்கி காலா வரை இன்னும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இருப்பது ஆச்சர்யம். ஆச்சர்யம் என்பதைவிட அதிசயம் என்று சொல்லலாம்.

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரால் மட்டுமே இது சாத்தியமாகியது. அவர்களில் ரஜினியும் ஒருவர் என்பது நடிகராக இந்தியா பெற்ற பொக்கிஷம்.

ஆனால், என்னதான் இயற்கை அவருக்கென்று தனியாக வரங்கள் கொடுத்திருந்தாலும், வளரும் போதே ரஜினிகாந்த் பின்பற்றிய குணாதிசயங்கள் தான் அவரை ஒரு நல்ல தலைவராக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.

மக்கள் செல்வாக்குள்ள மிகப்பெரிய உச்ச நட்சத்திர நடிகன் ஒருவன், சாலையில் படுத்து உறங்குவானா? அல்லது ரோட்டுக் கடையில் குல்லா அணிந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவானா? அதுதான் அவனுக்கு பிடிக்கிறதென்றால், இதைவிட தலைமைப் பண்புக்கு வேறென்னே தேவை. தலைவன் எளிமையாக இருந்தால் தான் எளிமையான மனிதன் அவனை நெருங்க முடியும்.

கோடிக்கணக்கில் சொத்து என்பது ரஜினி விரும்பாவிட்டாலும் அவரை வந்து சேர்ந்தே தீரும். ஏனெனில், ரஜினி செய்யும் தொழில் அப்படி... அத்தொழிலின் ஊதியம் அப்படி. இது நாமாக வகுத்துக் கொண்ட வழிமுறை தான். நமக்கு பிடித்த நடிகனின் படத்தை முண்டியடித்து முதல்நாள் எவ்வளவு செலவு செய்தாலும் பார்த்துவிட வேண்டும் என்று நாம் நினைக்கும் வரை நடிகர்களின் சம்பளம் விண்ணைத் தொடுவதில் மாற்றமில்லை. அதனால், 'ரஜினிக்கு எவ்வளவு சொத்து இருக்கு-னு தெரியுமா?'-னு கூறுவது சிறுபிள்ளைத் தனம். அந்த அளவிற்கு அவருக்கு வருமானத்தை கொடுத்ததே கேள்வி கேட்கும் நாம் தான்.

ஆனால், அந்த சொத்துகளையும் மீறி மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் தான் இன்று தமிழகத்திற்கு தேவை. அப்படி ரஜினி உண்மையாக நினைத்தால், ரஜினியை விட ஒரு நல்ல மக்கள் தலைவர் ஒருவர் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் மக்களுக்காக உயிரை மாய்த்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மக்கள் தலைவராக தகுதி இல்லாதவர்களா? அல்லது முடியாதா? ரஜினியை விட்டால் நமக்கு வேற ஆளே இல்லையா...? இருக்கிறார்கள். ஆனால், நாம் தான் அவர்களை கண்டுகொள்வதேயில்லையே. நம் கண் முன் பிரம்மாண்டமாய் தெரியும் பிம்பங்களுக்கு தானே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதன்வழிப்படித் தானே, இத்தனை ஆண்டுகாலமாக சினிமாத் துறையைச் சேர்ந்த பலரை நாம் நம்முடைய தலைவர்களாக்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் புள்ளப் பூச்சியெல்லாம் அரசியலுக்கு வரப் போகிறேன், மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என இன்று கிளம்பி வருகிறது. ஏதோ, இப்போது மலிவு விலையில் இண்டர்நெட் கிடைப்பதால், நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்களை எல்லாம் கேள்விகளாய் சமூக தளங்களில் மறைந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதையே பொதுவெளியில் தைரியமாக பேச எத்தனை பேருக்கு துணிச்சல் வரும்?

அப்படி மக்களுக்காக வாழ்ந்த பல மனிதர்களை நாம் உதாசீனம்படுத்தியதால் தான் சினிமாத் துறையைச் சேர்ந்த ரஜினியை நான் குறிப்பிடுகிறேன். ரஜினியை விட்டால் நமக்கு வேற ஆளே இல்லையா? என்று கேட்பவர்களுக்கு இதுதான் எனது பதில்.

ஒன்று மட்டும் நிதர்சனம்... இந்த உலகில் யாரும் நல்லவர்களும் கிடையாது, யாரும் கெட்டவர்களும் கிடையாது!.

Rajinikanth Kaala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment