Advertisment

அரசியலுக்கு வருவேன்... பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தருவேன்! நடிகை வரலட்சுமி சபதம்

அரபு நாடுகளில் என்ன செய்கிறார்கள். கடுமையான தண்டனை கொடுக்கிறார்கள். பயம் இருக்கிறது. அது போல ரேப் பண்ணா ’அதை’ வெட்ட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress varalakshmi

WEB EXCLUSIVE

Advertisment

ச.கோசல்ராம்

நடிகைகளில் வரலட்சுமி வித்தியாசமானவர்தான். எதையும் தைரியமாக பேசுகிறார். வெளிப்படையாக இருக்கிறார். பத்து படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் நிலையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார், நடிகை வரலட்சுமி.

நடிகைகள் பேச தயங்கும் விஷயத்தை முன்னெடுத்திருக்கும் அவர், ‘சேவ் சக்தி’ என்ற இயக்கத்தையும் தொடங்கியுள்ளார். நாம் அவரை சந்தித்த போது, காஷ்மிரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவமும், அதற்கு எதிரான கிளர்ச்சியும் உச்சத்தில் இருந்தது. அந்த சம்பவத்தில் இருந்தே பேச்சை ஆரம்பித்தார், நடிகை வரலட்சுமி சரத்குமார்.

‘‘காஷ்மிரில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் தெரிந்ததில் இருந்து தூக்கமே இல்லை. மிகக் கோபமாக ட்விட் செய்தேன். ஆனால் பாருங்கள், வழக்கமாக என் போட்டோக்களை போட்டால் ஆயிரக்கணக்கில் ரீட்விட் ஆகும். பல நடிகர், நடிகைகள் கூட ரீட்விட் செய்வார்கள். ஆனால், இந்த ட்விட்டை யாருமே ரீட்விட் செய்யவில்லை. நூறு ரீட்விட் கூட வரவில்லை. இதை ரீட்விட் செய்வதில் அவர்களுக்கு பிரச்சனை வரும் என்று நினைக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? குற்றவாளிகளை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நம்ம சிஸ்டமே மாறனும். ரேப்க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் பயம் வரும். இதுதான் இந்த பிரச்னைக்கு தீர்வு. வெளிநாட்டில் போனால் ஒரு பேப்பரைப் போட பயப்படுகிறோம். ஏன்? ஃபைன் போடுவார்கள். அதே ஆள் இங்கே எல்லாம் செய்வான். நம்ம ஊரில் சட்டத்தை மதிப்பதில்லை. அதுதான் காரணம். மரணதண்டனை பற்றி பேசினால், மனித உரிமை என்பார்கள். கஷ்மீரில் சிறுமிக்கு நடந்தது மனித உரிமை இல்லையா?’’

actress varalakshmi நடிகை வரலட்சுமி

சேவ் சக்தி இயக்கத்தை ஆரம்பித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, மத்திய சட்ட அமைச்சரை சந்தித்தீர்கள்? அதன் பின்னர் எந்த செயல்பாடுகளும் இல்லையே? ஏன்?

‘‘சேவ் சக்தி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கையெழுத்துப் போட்டார்கள். பின்னர் மத்திய அமைச்சர், தமிழக முதல்வரை சந்தித்து, மாவட்டத்தில் ஒரு மகிளா கோர்ட் அமைக்க வேண்டும் என மனு கொடுத்தேன். அப்போதுவரையில் வெறும் பெட்டிஷன் கொடுக்கும் அமைப்பாகதான் ‘சேவ் சக்தி’ இருந்தது. இப்போது அதை ஆர்கனைசேஷனாக மாற்றியிருக்கிறேன். வாக்கத்தான் நடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நிதி வசூலித்திருக்கிறோம்.’’

மத்திய அமைச்சர், முதல்வர் எடப்பாடி பழனிச்சமியை சந்தித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

‘‘மத்திய சட்ட அமைச்சரை சந்தித்த போது, என்னுடைய பெட்டிசனை படித்துப் பார்த்துவிட்டு ஷாக்காகிவிட்டார். மாவட்டம்தோறும் மகிளா நீதிமன்றம் இல்லை என்பதை ஆச்சரியமாகப் பார்த்தார். எப்படி இவ்வளவு தூரம் டேட்டா எடுக்க முடிந்தது என்றார். என்னை உட்கார வைத்துக் கொண்டே அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதினார். அவரை சந்தித்து விட்டு வந்த பின்னர், மற்ற மாநில முதல்வர்களிடம் இருந்து வந்த கடித நகல்களையும் அனுப்பி வைத்தார். எல்லா மாநில முதல்வர்களும் பதில் அனுப்பி இருந்தார்கள், தமிழகத்தைத் தவிர. இதில் இருந்தே நீங்கள் தமிழக முதல்வருடனான சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு நிமிடத்துக்கு மேல், முதல்வர் என்னிடம் பேசவில்லை. பார்க்கிறேன் என்று மட்டுமே சொன்னார்.’’

அடுத்து என்ன செய்வதாக திட்டம்?

‘‘எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்துவிட முடியாது. நேரம் கொடுக்க வேண்டும். ஓராண்டாவது டைம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நான் மனு கொடுத்து 8 மாதம் ஆகப்போகிறது. இங்கே அதுக்குள் என்னன்னவோ நடந்துவிட்டது. அதான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் என்று நினைக்கிறேன்.’’

ஓராண்டு என்பது அதிகமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

‘‘நான் முதலில் அரசியல்வாதி இல்லை. இதில் நான் கேட்கதான் முடியும். இது தொடர்பாக 3 முறை முதல்வரையும், 2 முறை துணை முதல்வரையும் பார்த்துவிட்டேன். நான் கொடுத்த மனு மீது ஒராண்டுக்கு பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவேன். மாவட்ட மகிளா கோர்ட் கொண்டுவராமல் விடமாட்டேன்.’’

சினிமாவிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்கிறது. கேரளா, தெலுங்கானாவில் பிரச்னை வெடித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீங்க...?

‘‘எல்லா இடத்திலும் பிரச்னை இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். அந்த போராட்டம் நியாயமாக இருக்க வேண்டும். கேரளாவில் போலீசுக்கு போனார். அது சரியானது. தெலுங்கில் அவருக்கு பிரச்னை இருந்திருக்கலாம். அதை அவர் இப்படி சொல்லியிருக்கக் கூடாது. அவர் தன் மீதான மரியாதையை குறைத்துகொண்டார். சினிமா துறையில் உள்ள பெண்களுக்காக நான் ஏன் போராடுவதில்லை என்றால், பல விஷயங்களை அவர்கள் தெரிந்துதான் செய்கிறார்கள். ஒரு விஷயத்தை ஏற்கலாம்... அல்லது மறுக்கலாம். ஆமாம் என்று சொல்லிக் கொள்ளும் பெண்களுக்காக நான் ஏன் போராட வேண்டும்? சாமானிய பெண்கள், குரல் கொடுக்க ஆளில்லாதவர்களுக்குத்தான் நான் போராடுவேன்.’’

சினிமாவிலும் விருப்பம் இல்லாமல் இது போன்ற செயல்களுக்கு கட்டாயப்படுத்தப்படும் சம்பவங்கள் நடக்கதானே செய்கிறது?

‘‘சினிமாவிலும் அப்படி நடக்கலாம். ஐடியில் வேலைபார்க்க்கும் பெண் பேசுவதற்கும் நடிகை பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? நடிகை சொன்னால் எல்லோரும் கேட்கத்தானே செய்வார்கள். தைரியமாக சொல்ல வேண்டும். என்ன நடக்கும். இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் புறக்கணிப்பார்கள். என்னையும் அப்படித்தான் வெளியே சொல்லக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் சொன்னேன். இன்றைக்கு எனக்கு வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாவிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.’’

சினிவில் பாலியல் தொல்லை மட்டுமல்ல... ஊதியத்திலும் பாகுபாடு இருக்கிறதே?

‘‘ஆண்களுக்கு இணையான சம்பளம் மட்டுமல்ல... முக்கிய காதாபாத்திரத்தில் நடிப்பவரைவிட, பாப்புலரான நடிகைக்குத்தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். அவர்களை வைத்து பிசினெஸ் நடக்கிறது. இதற்கு யாரையும் குற்றம் சொல்லக் கூடாது. பல ஆண்டுகளாக இந்த பிரச்னைகள் இருக்கிறது. எல்லா பிரச்னையிலும் கவனம் செலுத்தினால், எதிலும் தீர்வு கிடைக்காமல் போய்விட வாய்ப்புள்ளது. எந்த பிரச்னை முக்கியமோ அதை முதலில் தீர்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பெண்களுடைய பாதுகாப்புத்தான் முக்கியம். என்ன செய்தால் இந்த சூழல் மாறும் என்பதையே நான் சிந்திக்கிறேன்.’’

நீங்களே பதிக்கப்பட்டதால் இந்த பிரச்னையில் அதிகமாக கவனம் செலுத்துகிறீர்களா?

‘‘போடா போடி 2012ல் ரிலீஸானது. அதன் பின்னர் பெரிய கேப் விழுந்தது. ஏன்? பல காரணங்கள் வெளியே சொல்லலாம். ஆனால், சிலர் எதிர்பார்த்த சில செயலுக்கு நான் உடன்படவில்லை. அதனால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கு நடந்தது மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என்பதால் சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன். நல்லவர்களும் இருக்கிறார்கள். நான் மாறவே இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். என்னை வைத்து படம் எடுக்கத்தானே செய்கிறார்கள். இவங்க பேசினா... நின்னா உண்மைக்காக நிக்கிறாங்க என்ற நிலை வர வேண்டும். சேவ் சக்தி இயக்கம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கானதுதான். இது ஒரு துளிதான். இதையெல்லாம் தாண்டி, ரேப் நடந்தால், வெட்டு, அல்லது சாவு என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்பத்தான் பயம் வரும். தப்பு நடக்காது. ’’

Actress varalakshmi நடிகை வரலட்சுமி

பாலியல் வன்முறைக்கு மரண தண்டனைதான் தீர்வா? உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றல்லவா பேசுகிறார்கள்?

‘‘அரபு நாடுகளில் என்ன செய்கிறார்கள். கடுமையான தண்டனை கொடுக்கிறார்கள். பயம் இருக்கிறது. அது போல ரேப் பண்ணா ’அதை’ வெட்ட வேண்டும். காஷ்மீரில் சிறுமியை எப்போது ரேப் செய்தார்கள். ஜனவரியில்... இந்த நேரம் குற்றவாளிகள் செத்திருக்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்திருக்க வேண்டுமா இல்லையா? பெண்களுக்கு எதிரான இந்த பிரச்சனையில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். நான் சாகும் முன் ரேப் பண்ணால் டெத் பெனால்டி என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன்.’’

அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?

‘‘பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன். காஷ்மீர் சிறுமி விஷயம் தொடர்பாக ட்விட் பண்ணினேன். அதை ரீட்விட் பண்ணவே பயப்படுகிறார்கள். நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். இதையெல்லாம் மாற்றுவேன். இப்ப எனக்கு நேரம் இல்லை. அரசியலை நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆரசியலுக்கு நிச்சயம் வருவேன்.’’

பெண்களின் பாதுகாப்புக்கு அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

‘‘பெண்களின் பாதுகாப்புக்கு பள்ளியிலேயே செல்ப் டிபன்ஸ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதே போல செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Varalakshmi Sarathkumar S Kosalram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment