Advertisment

ஜெயலலிதா நினைவு தினம் : “உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது அம்முவுக்குப் பிடிக்கும்” - ஏவி.எம்.சரவணன்

உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது என்றால், அம்முவுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
avm saravanan, jayalalitha

ஜெயலலிதா தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை கொண்டவர். அவரது முதலாமாண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. தனி மனுஷியாக அரசியலில் நின்று போராடி ஜெயித்தவர் ஜெயலலிதா. தன்னை நம்பியவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான கதைகள் இருக்கின்றன.

Advertisment

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எங்க மாமா’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்தவர் ஜெயலலிதா. ஏவி.எம்.சரவணனிடம் ஜெயலலிதா குறித்துப் பேசினேன்...

“சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா பேசியபோது, முதலில் தாதா பால்கே சாகிப் பெயரைச் சொல்லிவிட்டு, இரண்டாவதாக ஏவி.மெய்யப்பன் என என்னுடைய தந்தை பெயரைச் சொன்னார். அந்த அளவுக்கு என் தந்தை மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் எனக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. அவர் பேசி முடித்துவிட்டு வந்ததும், ‘என்னால் நீண்ட நேரம் உட்கார முடியாது மேடம், நான் கிளம்புகிறேன்’ என்று சொன்னேன். ‘உங்களால் வெகுநேரம் அமர முடியாது என எனக்கும் தெரியும். நீங்கள் விழாவுக்கு வந்ததற்கு நன்றி’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்” என்று நெகிழ்ந்தவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதா எப்படி இருப்பார் என்பதை விளக்கினார்.

“ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு காட்சி இல்லையென்றால், ஒரு பேனை போட்டுவிட்டு புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். யாருடனும் அரட்டை அடிப்பதோ, புறளி பேசுவதோ கிடையாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். நான் போய், ‘குட்மார்னிங் அம்மு’ என்று சொன்னால், புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்து, ‘குட்மார்னிங் சார்’ என்று சொல்வார்.

இயக்குநர் திரிலோக சுந்தருக்கும் புத்தகங்கள் படிப்பது என்றால் பிடிக்கும். எனவே, அவர் மட்டும் அம்முவுக்குப் பக்கத்தில் சேரைப் போட்டுக்கொண்டு, ‘இந்தப் புத்தகம் படித்தீர்களா... அந்தப் புத்தகம் படித்தீர்களா..?’ என்று கேட்டுக் கொண்டிருப்பார். உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது என்றால், அம்முவுக்கு ரொம்பவும் பிடிக்கும். உலகம் முழுவதும் உள்ள எல்லா தலைவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். திரிலோக சுந்தரும், அம்முவும் தாங்கள் வைத்திருக்கும் புத்தங்களை பரிமாறிக் கொள்வார்கள்” என்றார்.

தொடர்ந்து, “சூர்யாவை வைத்து ‘பேரழகன்’ படத்தை எடுத்தோம். திருட்டு விடிசி விற்பனை உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. அண்ணா சமாதி, மவுண்ட் ரோடு என பொதுவெளியிலேயே 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். எனக்கோ பெரிய வருத்தம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘இப்படி திருட்டு விடிசி விற்பனை தலைவிரித்து ஆடினால், ஸ்டுடியோவைத் தொடர்ந்து நடத்த முடியாது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். கடிதம் எழுதி அனுப்பி வைத்தபிறகு, அத்துடன் அதை மறந்துவிட்டேன்.

2005ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி. இரவு 9.30 மணிக்கு ஜெயலலிதாவின் உதவியாளர் போன் பண்ணார். ‘மேடம் உங்களை வரச் சொன்னாங்க. நாளைக்கு காலையில் 11 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட்’ என்றார். ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘தெரியாது சார், உங்களை மட்டும் வரச் சொன்னாங்க’ என்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னதான் நன்கு பழக்கமானவர் என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர் கூப்பிட்டால் கொஞ்சம் பயமாகத்தானே இருக்கும்..?

நான் 10.30 மணிக்கே சென்றுவிட்டேன். அவர் அறைக்குள் நான் நுழைந்ததும், எழுந்துநின்று எனக்கு வணக்கம் சொன்னார். அதைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னை அமரச்சொல்லி, ஏதேதோ பேசினார்கள். ‘என்னை எதுக்கு வரச் சொன்னீங்கனு தெரிஞ்சிக்கலாமா மேடம்?’ என்று கேட்டேன். ஃபைலில் இருந்து நான் எழுதிய கடிதத்தை எடுத்தார்.

‘இதைப் படித்ததும் என் மனதுக்கு கஷ்டமாகி விட்டது. உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும், நான் இந்த ஸீட்டில் இருக்கும்வரை நிச்சயம் என்னை அணுகலாம். என் பி.ஏ.விடம் சொன்னால் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பார். நீங்கள் ஸ்டுடியோவை விட்டுவிடக் கூடாது. இந்தியாவிலேயே பழமையான ஸ்டுடியோ இது. நாங்கெல்லாம் அதில் வேலை பார்த்திருக்கிறோம். அதை அப்படியே விட்டுவிடக் கூடாது’ என்றார்.

ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்திற்காக ராஜாஜி இல்லத்தில் ஷூட் செய்யவேண்டி இருந்தது. அனுமதி கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்தால், பதில் வரவே இல்லை. உடனே அவருடைய பி.ஏ.வுக்கு போன் பண்ணி, ‘மேடம்தான் அதில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும்’ என்று சொன்னேன். அன்று இரவே எனக்கு போன் பண்ணி, ‘நாளை காலை 10 மணிக்கு உங்கள் பி.ஆர்.ஓ.வை அனுப்பி அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார் ஜெயலலிதாவின் உதவியாளர். நான் கேட்டதும் உடனடியாக உதவிய அந்த உள்ளத்தை எப்போதும் மறக்க முடியாது” என்று நெகிழ்கிறார் ஏவி.எம்.சரவணன்.

ஜெயலலிதா நினைவு தின சிறப்புக் கட்டுரைகள்:

1.தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முதல் பெண் உறுப்பினர், ஜெயலலிதா – ச.கோசல்ராம்

2. தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

3. “ஜெயலலிதா யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” – செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு

4. ஜெயலலிதா இல்லாத ஒரு வருடம் – கவிதா முரளிதரன்

5. “அம்மா”என்ற முத்திரையை தக்கவைத்துக் கொள்ள காத்திருக்கும் சவால்கள் - பால்ராஜா

6. ஜெயலலிதா இல்லாத தமிழகம் எப்படி இருக்கிறது. - ஆ.சங்கர்

Avm Saravanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment