உலகம் முழுவதும் 1500 கோடி வசூலைத் தாண்டி, தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவரும் ‘பாகுபலி 2’ படம் குறித்து முக்கிய பாலிவுட் பிரபலங்கள் இதுவரை வாய்த் திறக்கவேயில்லை. அவர்களது பட வசூலையும் மிஞ்சி, அதற்கும் மேல், கற்பனை செய்ய முடியாத வசூலை அடைந்திருப்பதே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது ஃபேஸ்புக்கில் இப்படம் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், “ராஜமவுலி காரு, கீரவாணி காரு மற்றும் ஒட்டுமொத்த பாகுபலி 2 குழுவினருக்கு….. சென்னையில் இப்போதுதான் படத்தைப் பார்த்தேன். பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் 2000 கோடியைத் தாண்டும் என நம்புகிறேன். தென்னிந்திய படங்களுக்கு உலகளவிலான வாசலை வெள்ளமென திறந்துள்ளீர்கள். அதோடு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளீர்கள்” என்று பாராட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராஜமவுலி, “மிக்க நன்றி சார்.. உங்களது பாராட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.