Advertisment

நடிகைகள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்! - குற்றச்சாட்டும் குளறுபடியும்

நடிகைகள் திரையுலகில் உள்ள ஆண்களை படுக்கைக்கு வரும்படி அழைக்கிறார்கள், திருமணமான ஆண்களை குறி வைக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகைகள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்! - குற்றச்சாட்டும் குளறுபடியும்

பாபு

Advertisment

திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. முன்னணி நடிகைகளும் இந்த பாலியல் சீண்டல்களிலிருந்து தப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபமாக வலுத்து வருகிறது.

இந்தியில் நடிக்கும் கங்கனா ரனவத், இலியானா, தாப்ஸி போன்ற பல நடிகைகள் இந்தக் குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைக்கிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இதனை ஒரு கடமையாகவே செய்து வருகிறார். தென்னிந்திய படத்தில் நடிக்க வந்தபோது, உடன் நடித்த நடிகர் காலை தடவியதாகவும், உடனே அவர் கன்னத்தில் அறைந்ததாகவும் குறிப்பிட்டார். தேவ் டி படத்தின் ஆடிஷனில், படத்துக்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளச் சொன்னதாகவும், தான் அதை செய்ததாகவும் கூறியுள்ளார்.

ராய் லட்சுமி, வரலட்சுமி என தமிழில் நடிப்பவர்களும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். மலையாளத்தில் பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீஸன் போன்றவர்கள் சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள். நடிகைகளுக்கென தனி அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

'திரையுலக ஆண்கள் - நடிகைகள்' இடையேயான இந்த மோதலை வெளியே உள்ள சமூகம் வேடிக்கையாகவே இதுவரை பார்த்து வந்திருக்கிறது. 'உங்களை படுக்கைக்கு அழைத்த நடிகர் யார்? தயாரிப்பாளர் யார்? தைரியமாக வெளியே சொல்லுங்கள்' என்று சமூக வலைத்தளங்களில் ஆதரவு என்ற பெயரில், அடுத்தவர் அந்தரங்க ரகசியம் அறியும் ஆவல் தவிர்த்து இந்தப் பிரச்சனையில் சமூகத்தின் பங்களிப்பு எதுவுமில்லை. 'ஆமா, நீங்க பெரிய பத்தினி' என்ற அசட்டையான அடியோட்டம் இல்லாத மனங்கள் குறைவு.

பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசினால், சினிமாவிலிருந்து உடனடியாக வெளித்தள்ளப்படுவோம் என்ற பயம் நடிகைகளுக்கு உள்ளது. அதைவிட, வெளிவரும் உண்மைகளால் ஆண்களைவிட நடிகைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள், விமர்சனத்துக்குள்ளாவார்கள். இந்த யதார்த்தமே நடிகைகள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்கள் இன்றுவரை பூடகமாக பேசி வருவதற்கான காரணம்.

இப்படியொரு சூழலில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவியும், காஸ்ட்யூம் டிஸைனருமான நேஹா, நடிகைகள் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். "நடிகைகள் திரையுலகில் உள்ள ஆண்களை படுக்கைக்கு வரும்படி அழைக்கிறார்கள், திருமணமான ஆண்களையே குறி வைக்கிறார்கள், குடும்பத்தை உடைக்கிறார்கள், பாலியல் தொழிலாளிகளைவிட மோசமானவர்கள்" என கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

நேஹாவின் குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 'தைரியமாக பெயரைச் சொல்லுங்கள் மேடம்' கோஷ்டிகள் இதிலும் புகுந்தன. பிரச்சனை உங்க கணவருக்கா என்றனர். அது எந்த நடிகை, பெயரைச் சொல்லுங்கள் பார்த்துக்கலாம் என்றனர். இவங்களை சும்மாவிடக்கூடாது, நாங்க உங்ககூட இருக்கிறேnம் என்றனர். இந்த ஆதரவு கரங்களுக்கு அடியில் அது எந்த நடிகையாக இருக்கும் என்ற அந்தரங்க கிளுகிளுப்பே தட்டுப்படுகிறது.

தனது குற்றச்சாட்டு தனது கணவரை நோக்கியே திரும்பியதால் நேஹா தனது ட்விட்டர் பதிவை நீக்கினார். "எனது கணவரை முன்னிட்டு இதனை எழுதவில்லை. என்னுடைய கணவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னைச்சுற்றி நடக்கும் விஷயங்கள் இவை. அந்த மோசமானவர்கள் திருமணமானவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள். பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசுவதால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. அதே நேரம் இப்படிப்பட்ட ஷோ காட்டும் பெண்களுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும்" என விளக்கம் அளித்தார்.

நேஹா கூறுவது போல் சிலர் இருக்கலாம். ஆம், மிகச்சிலர். நேஹா முன்வைக்கும் குற்றச்சாட்டில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். 'பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசுவதால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை' என்கிறார். பெண்ணும் பெண்ணும் சம்பந்தப்படுவதால் நேஹா கூறுவது போல் இதுவொன்றும் லெஸ்பியன் பிரச்சனையல்ல. இங்கே ஆணும் சம்பந்தப்பட்டிருக்கிறான். இந்தப் பிரச்சனையில் திருமணமான அந்த ஆணின் பங்கு என்ன? திருமணம், செக்ஸ் குறித்து அறியாத சின்னத்தம்பியா அவன்?

சினிமாவில் பெண்கள் படுக்கைக்குவர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால், நடிகைகளால் அப்படி ஆண்களை நிர்ப்பந்திக்க இயலாது. தங்களது அழகால் ஆணை வேண்டுமானால் சபலப்படுத்தலாம். ஒருவர்மீது அதிகாரத்தை செலுத்துவதற்கும், சபலப்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. துணை நடிகை முதல் முன்னணி நடிகைவரை பாலியல் சுரண்டலை எதிர்கொண்டுவரும் நிலையில், அதற்கு எந்தவொரு தீர்வும் இல்லாத நிலையில், நேஹா வைத்திருக்கும் குற்றச்சாட்டு நடிகைகளை மனரீதியில் பலவீனப்படுத்தும். சமூகத்தில் அவர்கள் மீது மெல்லியதாக உள்ள நியாயத்தையும் இல்லாமல் செய்யும்.

நேஹாவின் பதிவிலிருந்து எந்த நடிகை எந்த திருமண ஆணை படுக்கைக்கு அழைக்கிறார் என்ற விவரங்கள் அவருக்கு துல்லியமாக தெரியும் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிகிறது. நடிகைகள் மீது குத்துமதிப்பாக இந்த குற்றச்சாட்டை வைத்ததற்குப் பதில் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் நேரடியாகவே பேசியிருக்கலாம், கண்டித்திருக்கலாம். இப்படி வெளிப்படையாக பேசியதன் மூலம் 'நடிகைங்களைப் பத்தி நமக்கு தெரியாதா என்ன?' என்ற சமூகத்தின் எள்ளலுக்கு அவர் வலு சேர்த்திருக்கிறார்.

பாலியல் சுரண்டலில் ஆணை தவிர்த்துவிட்டு வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் சார்பானவை, குறையுள்ளவை, தவிர்க்கப்பட வேண்டியவை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment