Advertisment

நடிகர் விஜயகாந்த் - 40

விஜயகாந்த் நடிகராக திரையுலகில் கால் பதித்து நாற்பது வருடங்களாகிறது. ஜயகாந்தைப் பற்றி சொல்லவும், பகிரவும் நிறைய இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பாபு

Advertisment

விஜயகாந்த் நடிகராக திரையுலகில் கால் பதித்து நாற்பது வருடங்களாகிறது. அவரது கட்சிக்காரர்கள் இதனை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். விஜயகாந்தைப் பற்றி சொல்லவும், பகிரவும் நிறைய இருக்கிறது இந்த சந்தர்ப்பத்தில்.

1. விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. சொந்தமாக ரைஸ் மில் உள்ள பணக்கார குடும்பத்தில் பிறந்தார். வருடம், 25 ஆகஸ்ட் 1952.

2. விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ; அழகர்சாமி.

3. சின்ன வயதிலேயே சினிமாவில் ஆர்வம். சினிமாவுக்காக விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார்.

4. விஜயகாந்தின் முதல் படம் இனிக்கும் இளமை. 1979 இல் வெளியானது. ஆனால், படம் சரியாகப் போகவில்லை.

5. விஜயகாந்தின் முதல் பிரேக், 1980 இல் வெளியான தூரத்து இடிமுழக்கம். அவரை தமிழ் ரசிகர்கள் ஒரு நாயகனாக அங்கீகரித்த படம்.

6. 1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் முதல் மாஸ் ஹிட். எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தை இயக்கியிருந்தார். மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்திலிருந்து விஜயகாந்த் - எஸ்.ஏ.சந்திரசேகரன் காம்பினேஷன் கொடிகட்டிப் பறந்தது.

7. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதலில் திரையிடப்பட்ட விஜயகாந்தின் படம், தூரத்து இடிமுழக்கம்.

8. ஆரம்பகாலத்தில் விஜயகாந்தின் கதாபாத்திர பெயர் பெரும்பாலும் விஜய் என்றே இருக்கும். இதுவரை பத்தொன்பது படங்களில் அவரது கதாபாத்திரத்துக்கு விஜய் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

9. கம்யூனிச சித்தாந்தத்தின் மீது அப்போது அவருக்கு ஈடுபாடு இருந்தது. வெள்ளை புறா ஒன்று படத்தில் அவர் அணிந்திருக்கும் செயினில் சுத்தியல் அரிவாள் நட்சத்திர டாலர் இருப்பதை பார்க்கலாம்.

10. 1984 விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான வருடம். அந்த வருடம்தான் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படம் வெளியானது.

11. 1984 இல் வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், சபாஷ் உள்பட 18 படங்கள் வெளியாயின. இவை அனைத்திலும் விஜயகாந்த் நாயகனாக நடித்திருந்தார். நாயகனாக ஒரு நடிகரின் படம் ஒரு வருடத்தில் 18 வெளியானது, இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

12. ஆரம்பத்தில் விஜயகாந்தின் கறுப்பு நிறம் காரணமாக முன்னணி நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர். தொடர் வெற்றிகளுக்குப் பிறகு விஜயகாந்துடன் நடிக்க ஒருகாலத்தில் புறக்கணித்தவர்களே போட்டி போட்டனர்.

13. தமிழின் முதல் 3டி படமான அன்னை பூமி விஜயகாந்த் நடித்ததுதான்.

14. ஆக்ஷன் படங்களில் தொடர்ச்சியாக நடித்தவர் நானே ராஜா நானே மந்திரி படத்தில் முதல்முதலாக காமெடி காட்சிகளில் நடித்தார். நகைச்சுவையை மையப்படுத்தி வந்த முதல் விஜயகாந்த் படம் இது.

15. விஜயகாந்தின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான அம்மன் கோவில் கிழக்காலே 1985 இல் வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் 20 திரையரங்குகளில் 200 நாள்களை கடந்து ஓடி சாதனைப் படைத்தது.

16. அம்மன் கோவில் கிழக்காலே படத்துக்காக விஜயகாந்த் சிறந்த நடிகருக்கான தனது முதல் ஃபிலிம்பேர் விருதை பெற்றார்.

17. நாயகனாகவும், கம்யூனிஸ்டாகவும் நடித்து வந்த விஜயகாந்த் நம்பினோர் கெடுவதில்லை பக்திப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார்.

18. புதியவர்கள், பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் விஜயகாந்தையே அப்போது நம்பியிருந்தனர். அவர்களின் படங்களில் விஜயகாந்த் தொடர்ந்து நடித்தார். பிலிம் இன்ஸட்டிட்யூட் மாணவர்களின் உருவாக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் இன்றும் பேசப்படும் படமாக உள்ளது.

19. விஜயகாந்தும், சிவாஜியும் இணைந்து நடித்த படம் வீரபாண்டியன்.

20. ராஜசேகர் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த படம் கூலிக்காரன். அன்றைய காலகட்டத்தில் மிகப்பிரமாண்டமாக தயாரான படம் இது.

21. விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். இருவரும் ஒரேநேரத்தில் சினிமாவுக்கு வந்தனர். அப்போதெல்லாம் கதை சொல்லப்போனால் இப்ராஹிமை பாருங்கள் என்றே விஜயகாந்த் சொல்வார். சம்பளம் முதற்கொண்டு அனைத்தையும் இப்ராஹிம் ராவுத்தாரே கவனித்து வந்தார்.

22. 1987 இல் விஜயகாந்தின் உழவன் மகன் வெளியானது. தமிழ் சினிமாவில் முதல்முதலில் ரேக்ளா காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட படம் இது.

23. 1988 இல் வெளியான பூந்தோட் காவல்காரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது விஜயகாந்துக்கு கிடைத்தது.

24. அதே 1988 இல் வெளியான செந்தூரப்பூரே மாபெரும் வெற்றிப் படமானதுடன், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் விஜயகாந்துக்கு பெற்றுத் தந்தது.

25. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம், நல்லவன். தாணு படத்தை தயாரித்திருந்தார். ஏரியில் விஜயகாந்த் வில்லன்களுடன் மோதும் காட்சியை மிகுந்த பொருட்செலவில் எடுத்திருந்தனர்.

26. 1990 விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத வருடம். இந்த வருடத்தில்தான் செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை வெளியானது. விஜயகாந்தின் லெக் பைட் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

27. விஜயகாந்தின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான சத்ரியனும் இந்த வருடமே வெளியானது. மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது.

28. பொதுவாக நடிகர்களின் 100 வது படம் சுமாரான வெற்றியாகவே அமையும். ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரா. கமலின் 100 வது படம் ராஜபார்வை. முன்னது தோல்வி. பின்னது விமர்சனரீதியாக பாராட்டப்பட்டாலும் அவ்வளவாக வசூலிக்கவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100 வது படமான கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்றது.

29. ரஜினி, கமலை வைத்து ஆர்.உதயகுமார் படம் இயக்குவதற்கு விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய சின்ன கவுண்டர் படத்தின் வெற்றியே காரணமாக அமைந்தது.

30. எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி எடுத்த நாளைய தீர்ப்பு தோல்வியடைந்தது. தனது மகனை விஜயகாந்துடன் நடிக்க வைத்தால் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்க்கலாம் என்று விஜயகாந்திடம் கூற, மறுப்பேதும் சொல்லாமல் விஜயகாந்த் நடித்த படம், செந்தூரப்பாண்டி. படம் ஹிட். விஜய்க்கு இதுதான் முதல் வெற்றிப் படம்.

31. தனது கார் டிரைவராக இருந்த சுப்பையாவுக்காக விஜயகாந்த் நடித்துத் தந்த படம்தான் பெரியண்ணா.

32. பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஒரேயொரு படம், தமிழ் செல்வன்.

33. விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த வானத்தப்போல 250 நாள்களை கடந்து ஓடியது.

34. வானத்தப்போல படத்துக்கு இரண்டு தமிழக அரசு விருதுகளும், சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தன.

35. முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா ஹிட்டானது. இந்தக் கதை என்னுடையது என்று இயக்குனர் நந்தகுமரன் பிரச்சனை செய்ய, அவருக்கு உதவும்வகையில் தென்னவன் படத்தில் நந்தகுமரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்தார்.

36. விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தபோது மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்தின் பல வருட கடனை அடைத்தார். முதல்முறையாக அவரது முயற்சியிலேயே ரஜினி, கமல் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஜயகாந்தின் நிர்வாகத்திறனுக்கு இன்னும் இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.

37. அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜயகாந்த் படங்களில் நடிப்பதை குறைத்து, ஒருகட்டத்தில் முழுமையாக நடிப்பதையே நிறுத்தினார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விருதகிரி.

38. தமிழன் என்று சொல் என்ற படத்தை விஜயகாந்தை வைத்து தொடங்கினார்கள். ஆனால், அது முடிவடையவில்லை.

39. அடுத்த வருடம் விஜயகாந்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

40. பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியதை விஜயகாந்த் கடைசிவரை காப்பாற்றினார். அவர் நடித்த 150 க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட பிறமொழி கிடையாது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment