புரோகிதர்களுக்கு மிரட்டல் : சூர்யாவின் ஷூட்டிங் தடுத்து நிறுத்தம்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பின் போது புரோகிதர்களை மிரட்டியதாக புகார் எழுந்ததையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தம்.

ஷூட்டிங் நடக்க இருப்பதால், அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான புரோகிதர்கள், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அப்படி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், அதைப் படமாக்குவதற்காக தஞ்சை அருகிலுள்ள திருவையாறு பகுதிக்குச் சென்றுள்ளது படக்குழு. திருவையாற்றின் கரையில் படம்பிடிக்க முறையான அனுமதி பெறப்பட்ட நிலையில், நேற்று அங்கு படம்பிடிக்கச் சென்றது படக்குழு.

திருவையாற்றின் கரை என்பது, முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் இடம். காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள், திருவையாற்றின் கரையில் திதி கொடுப்பது வழக்கம். எனவே, ஆற்றில் தண்ணீர் இல்லையென்றாலும், தினம்தோறும் திதி கொடுக்க ஏராளமானவர்கள் வந்துசெல்வர். அதனால், தினமும் கிட்டத்தட்ட 50 புரோகிதர்கள் அங்கு இருப்பர்.

நேற்று அந்த புரோகிதர்களிடம் சென்ற படக்குழுவினர், அங்கு ஷூட்டிங் நடக்க இருப்பதால், அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான புரோகிதர்கள், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அப்படி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ‘இங்கு புனித காரியங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். சடங்குகள் நடக்காத நாளில் இங்கு வந்து ஷூட்டிங் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று படக்குழுவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு படம்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பியது படக்குழு.

×Close
×Close