Advertisment

அமெரிக்கா நடத்தும் ஆடு புலி ஆட்டம் : ஜெயிக்கப் போவது யார்?

இந்தியா தரும் மான்யத்தால், ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களைப் பாதிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
export good india to usa

ஆர்.சந்திரன்

Advertisment

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போக்கை வேறு எப்படி சொல்வது என்று வியக்கிறார்கள், பன்னாட்டு அரசியலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இந்தியாவையும், சீனாவையும் சீண்டுவதில் ஒரு பள்ளிக்கூட சிறுவனின் ஆர்வத்தோடு டிரம்ப் செயல்படுவதாகச் சொல்பவர்களும் உண்டு. இரும்பு எஃகு இறக்குமதிக்கு 25%, அலுமினியத்துக்கு 10% வரி என, அவர் செய்த அறிவிப்பு - உள்ளூரில் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்கு முன்பே, இரண்டாவதாக இன்னொரு அதிரடிக்கு விதை போட்டுள்ளார். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு - உள்ளூரில் அரசு வழங்கும் மான்யங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. இதை ஒரு புகாராக்கி, உலக வர்த்தக அமைப்பான WTOக்கு மார்ச் மாத இரண்டாவது வாரத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே, WTOவில் இந்தியா மீது இருந்த அமெரிக்காவின் இன்னொரு வழக்கு - இந்தியாவுக்கு கோழிக்கால் இறக்குமதி செய்வதில் இருந்த பிரச்னை தொடர்பானது, அண்மையில்தான் முடிவுக்கு வந்தது. பல ஆண்டுகளாக முன்னும், பின்னும் ஊசலாட்டத்தில் இருந்த இவ்வழக்கில் - பறவைக் காய்ச்சல் நோய்க் கிருமி பரவும் என்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லியும் சமாளிக்க முடியாமல், இந்த மல்லுக்கட்டில் இருந்து இந்தியா விலகிக் கொண்டது அண்மையில்தான். அந்த ஈரம் கூட இன்னும் முழுமையாக உலர்ந்தபாடில்லை. அதற்குள் அடுத்த புகார்!

"இந்திய அரசு தரும் மான்யத்தால், அதன் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களால், அந்த விலைக்கு விற்க முடியவில்லை. சந்தை வாய்ப்பு கை நழுவுகிறது. சமதளத்தில் நின்று வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், இந்தியா மாற வேண்டும்; மாறாவிட்டால் அமெரிக்கா தன்னை மாற்றிக் கொள்ளும்". டிரம்ப்பின் சுருக்கமான எச்சரிக்கை இது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 'எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதி' - அத்தனை அவசரமோ, நெருக்கடி தருவதோ இல்லை. காரணம், அமெரிக்காவின் மொத்த இறக்குமதி அளவில், 2 சதவீதத்தை ஒட்டித்தான் இந்தியா அனுப்பி வைக்கிறது என சில புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், அதாவது 2017 டிசம்பர் வரை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றது 44.53 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அலுமினியம் மற்றும் 26.64 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரும்பு எஃகுதான். ரூபாய் கணக்கில் பார்த்தால், இரண்டும் சேர்த்து 4000 கோடியைத் தாண்டாது என்கிறார்கள்.

ஆனால், இரண்டாவதாக டிரம்ப் வீசியுள்ள பவுன்ஸர் அப்படி அல்ல. ஐடி மென்பொருட்களில் தொடங்கி, ஆயத்த ஆடை, பின்னலாடை, உணவுப் பொருட்கள், வாகனங்கள், உதிரி பாகங்கள்.... இப்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் எல்லாமும் பாதிக்கப்படும். 2016 -17ம் நிதியாண்டு தகவல்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஓராண்டில் ஏற்றுமதியாகும் பொருட்களின் மொத்த மதிப்பு 2,74,365 கோடி ரூபாய். இது அத்தனையும் ஒரே நாளில் நம் கைவிட்டு போய் விடும் என்பதல்ல பொருள். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தொடர்ந்து நம்மால், அந்த அளவுக்கு வியாபாரம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகும். இந்த வியாபாரம் பாதிக்கப்பட்டால், இந்த உற்பத்தி நடந்த இந்திய நிறுவனங்கள்... அவற்றில் வேலை செய்த ஆட்கள்...., அதனால் அரசுக்கு கிடைத்து வந்த வரி..... என எல்லாமும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இரும்பு மற்றும் அலுமினிய வரி குறித்த டிரம்பின் முதல் அறிவிப்பு - இந்தியாவை விட, சீனாவை பெருமளவு பாதிக்கும் என்கிறார்கள். யதார்த்த நிலையைச் சொல்வதானால், இந்த இரு நாடுகள்தான் டிரம்பின் முக்கிய இலக்கு எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களில் - அதாவது மார்ச் 19 மற்றும் 20ம் தேதிகளில் தில்லியில் WTO உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மாநாடு நடந்தது. இதில், இந்திய தரப்பில் இருந்து அமெரிக்காவுடன் சமரசம் பேச, தீவிர முயற்சிகள் நடக்கும் என்பதுதான், இந்திய அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ரீட்டா டீயோட்டியா சொன்ன தகவல். அது நடந்தாகவே தெரிகிறது. தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள WTO தலைமையகத்தில் பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டி வரலாம். மறுபுறம், அமெரிக்காவின் உலோக இறக்குமதி வரி விதிப்புக்கு ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தேவையானால், இது தொடர்பாக அமெரிக்கா மீது நடவடிக்கையைத் தொடங்கவும் அவர்கள் தயாராவதாக தெரிகிறது.

இந்தியாவின் முன்னாள் வர்த்தகச் செயலர் ஜி கே பிள்ளை உள்ளிட்ட, சில அறிவுஜிவிகள், "அமெரிக்காவின் அடாவடியை சமாளிக்க ஒரே வழி, திருப்பி அடிப்பதுதான்" என்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, நாமும் வரிவிதிக்கலாம் என்பது அவர்களது யோசனை. அதாவது, மோதல்போக்குதான், டிரம்ப் மாதிரி ஆட்களுக்கு சரியான பதில் என்கிற அணுகுமுறையை பரிந்துரைக்கிறார்கள். பாதாம், பிஸ்தா, ஹெர்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள், லெவிஸ் ஜீன்ஸ், போர்பென் விஸ்கி போன்ற சில மதுவகை என ஒரு பட்டியல் - அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிறது.

டொனால்ட் டிரம்ப் தனது அறிவிப்பின்போது, "இந்தியாவில் இருந்து இருசக்கர வாகனங்கள் அமெரிக்காவுக்கு வருகின்றன. அதற்கு நாம் வரிவிதிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு போகும் ஹெர்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியாவில் 50 சதவீத வரி. அவர்கள், எங்களுக்கு 50% வரிவிதித்தால், நாங்களும் அதே அளவு வரிவிதிப்போம்" என்பது, டிரம்பின் முழக்கம். இதனால், தற்போது இந்திய ஏற்றுமதியாளர்களின் வானில் - மின்னல் வெட்டு, இடி முழக்கம், புயல் மழை! மொத்த பாதிப்பு எவ்வளவு என்பது, எல்லாம் ஓய்ந்த பிறகுதான் தெரியும் என்ற கவலையுடன் காத்திருக்கிறார்கள். இதனால், இந்திய அரசின் வர்த்தகத் துறை, கடும் தலைவலியில் உள்ளது

WTO ஒப்பந்த உறுப்பு நாடுகளிடையே, திடீரென ஒரு நாடு தன் விருப்பம்போல வேறு ஒரு நாட்டின் மீது வரிவிதிக்க இயலாது. இதனால்தான் உலோக இறக்குமதிக்கு வரிவிதிக்கும் ஆணையில், "இது நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக" என, ஒரு குறிப்பை டிரம்ப் சேர்த்து வெளியிட்டார். இதை, நமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, "அமெரிக்கா எங்கள் நட்பு நாடு. அதனுடன் எங்களுக்கு முரண்பாடு எதுவுமில்லை. எனவே, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் இந்தியா அச்சுறுத்தல் இல்லை. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்படும் வரியை, எங்களின் மீதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு தரப்பட்டுள்ள சலுகை போல, இந்தியாவுக்கும் வரியில்லா நிலையைத் தர வேண்டும்" என்ற, நாசுக்கான பேச்சு வார்த்தைக்கு - இந்திய அரசின் வர்த்தக செயலர் ரீட்டா டீயோட்டியா உள்ளிட்ட அணியினர் தயாராகிறார்களாம்.

இந்திய அரசு சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகள் தரப்படுகின்றன என்பது உண்மைதான். நம்பத்தகுந்த புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் இருந்து, ஏற்றுமதி செய்பவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தரப்படும் மான்ய சலுகையின் மதிப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதானால், சுமார் 45,500 கோடி ரூபாய். இந்த தொகையை, ஏற்றுமதிக் கடன் வட்டிச் சலுகை, ஏற்றுமதி செய்யும் உத்தரவாதத்தில், இறக்குமதி செய்யப்படும் இயந்திரம் மற்றும் கருவிகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை, சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க கட்டண சலுகை, ஏற்றுமதி மண்டலத் தொழில்களுக்கான சலுகை, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சலுகை.... இப்படி இன்னும் பல விஷயங்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.

இப்போது, இந்திய ஏற்றுமதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த காரணமாக இருக்கும் விதி - "மான்யங்கள் மற்றும் பிற சலுகைகள் தரப்படுவது குறித்தானது" அதாவது - WTO Agreement on Subsidies and Countervailing Measures.

இதன்படி, ஒரு நாடு வளர்ந்து வரும் நாடாக இருக்கும் பட்சத்திலும், அதன் ஆண்டு சராசரி தனிநபர் வருவாய் - தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு 1000 அமெரிக்க டாலரைக் கடக்கும் பட்சத்தில், அந்த நாடு ஏற்றுமதி தொழிலுக்கு மான்யம் தரக் கூடாது. ஏற்கனவே, அவ்வாறு வழங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதைப் படிப்படியாக நிறுத்த வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரைதான் அவகாசம் தரப்படும். மறுபுறம், ஒரு குறிப்பிட்ட பொருளின் சர்வதேச சந்தை வணிகத்தில் 3.5% அல்லது அதற்கும்மேல் சந்தை பங்கை தனியொரு நாடு தன் வசம் வைத்திருந்தால், அந்த நாடு, அப்பொருளின் ஏற்றுமதிக்கு சலுகை தரக் கூடாது என்பதெல்லாம் இது தொடர்பான விதிகள்.

இந்தியா, மேற்கண்ட விதிகளின்படி தற்போது பாதிப்புக்கு உள்ளாகிறது. காரணம் - கடந்த 2013, 2014, 2015 ஆகிய 3 ஆண்டுகளில், தொடர்ந்து தனது ஆண்டு சராசரி தனிநபர் வருமானத்தில் - 1000 அமெரிக்க டாலர் மதிப்பை இந்தியா கடந்துவிட்டது. அந்த தகவலை 2017ம் ஆண்டு, WTO முறைப்படி சான்றளித்து ஏற்றுக் கொண்டது. எனவே, 2018ல் தொடங்கி ஏற்றுமதிக்கான மான்யங்களை இந்தியா படிப்படியாக நிறுத்த வேண்டும். சந்தை பங்கு அதிகமுள்ள பொருட்களின் ஏற்றுமதியில் உடனடியாக சலுகையை நிறுத்த வேண்டும்.

உலோக இறக்குமதிக்கான வரி விஷயத்தில், மற்ற சில நாடுகள் திட்டமிடுவதாகச் சொல்லப்படுவது போல, அமெரிக்காவுடன் நேரடி மோதலில் இந்தியாவும் இறங்குமா என்பது சந்தேகம்தான். அதிகபட்சமாக, சமரச முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் போனால், WTO உறுப்பு நாடுகளில் ஒன்றோ, பலவோ.... சேர்ந்தோ, தனித்தோ அமெரிக்கா மீது வழக்கு தொடர்ந்தால், அதில் இந்தியா மூன்றாவது தரப்பாக தன்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இரண்டாவது பிரச்னையான ஏற்றுமதிச் சலுகைகளை திரும்பப் பெறுவது என்பதற்கு இந்திய அரசும், இந்திய ஏற்றுமதியாளர்களும் கூட இன்னும் தயாராகவில்லை. அதனால், WTOவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு அடுத்து வரும் நாட்கள் வியர்வை சிந்த ஓடிக் கொண்டே இருக்கும் செய்யும் நாட்களாகத்தான் இருக்கும்.

Donald Trump Wto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment