Advertisment

அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்- வானிலை மையம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்- வானிலை மையம்!

இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யும். வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையைப் பொறுத்தவரை கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுந்தினம் மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழை, நேற்று காலை வரை கொட்டித் தீர்த்தது. நேற்று மதியம் சிறிது வெயில் எட்டிப் பார்த்த நிலையில், மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், மெரீனா, போரூர், நுங்கம்பாக்கம், அசோக்நகர், பிராட்வே, வில்லிவாக்கம், கூடுவாஞ்சேரி, குன்றத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.

அதேபோன்று, திருவாரூர், திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் நேற்று மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், கூத்தாநல்லூர், நன்னிலம், குடவாசலில் கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

publive-image

இந்த நிலையில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

அதேசமயம், இன்று நடைபெறவிருக்கும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திட்டமிட்டப்படி நடக்கும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

ஆனால், இன்று நடைபெறவிருந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 08:30 நாகை: வைத்தீஸ்வரன்கோவில், வேட்டங்குடி, திருவாலி, புதுப்பட்டினம் உட்பட 9 இடங்களில் முகாம்கள் அமைப்பு; 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாலை 07:00 - திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சாத்தங்குடியில் கோடியனூரான் வாய்க்கால் உடைந்தது; 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் மூழ்கின.

மாலை 06:30 - காரைக்கால் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை; தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

மாலை 05:55 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து, 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மாலை 04:30 - நெல்லை மாநகர பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

மாலை 04:20 - திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பொன்னேரி, பென்னகரம், மீஞ்சூர் ஆகிய இடங்களை பலத்த மழை பெய்து வருகிறது.

பிற்பகல் 03:30 - சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மழை குறித்து 4540 புகார்கள் பெறப்பட்டு 2992 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 357 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 18,172 பேர் பயனடைந்துள்ளனர். சென்னையில் அக்.30ஆம் தேதி முதல் இன்று காலை 8.30 மணி வரை 422.04 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 376 கி.மீ நீள மழைநீர் வடிகால்களில் 300 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணி முடிவடைந்தது. கனமழையால் 329 இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது கண்டறியப்பட்டு 244 இடங்களில் மழைநீர் அகற்றம். கனமழையால் விழுந்த 70 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 22 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. நிவாரண முகாம்களில் 1997 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்; 73,470 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றுப்படுக்கைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி 5,000 பேருக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன. 14,000 டன் ஆகாயத்தாமரை மற்றும் குப்பைக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிற்பகல் 02:25 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

பிற்பகல் 02:05கடலில் வீணாக கலந்த ஒரு டிஎம்சி தண்ணீர்: அக்.,31-ஆம் தேதியில் இருந்து, நவம்பர் 3-ஆம் தேதி வரை, 1 டிஎம்சி மழைநீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. அடையாறு வழியாக ஒரு டிஎம்சி மழைநீர் கடலில் வீணாக கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது விநாடிக்கு 5000 கன அடியில் இருந்து 7000 கன அடி நீர் வங்கக் கடலில் கலக்கிறது என்றும் பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

பிற்பகல் 2:00 - சென்னை கிண்டி, ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

பிற்பகல் 1.30 : வட சென்னையில் வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வலுத்தது. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலும் கனமழை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் தி.நகர் உள்பட வேறு சில ஏரியாக்களில் இளவெயில் காட்சி தருகிறது.

chennai rains, heavy rain, tamilnadu சென்னை கீழ்ப்பாக்கத்தில்..

மதியம் 12:40 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 அல்லது 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மதியம் 12:20 - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சற்றுமுன் அளித்த பேட்டியில், "மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் கனமாக மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை, மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை இருக்கும். சென்னையில் நவ.1 முதல் இதுவரை வழக்கத்தை விட 93% அதிகமாக பருவமழை பெய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

மதியம் 12:10 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் 131 ஏரிகள் நிரம்பியுள்ளதாக ஆட்சியர் சுந்தரவள்ளி அறிவிப்பு.

காலை 11:50 - சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப பயிற்சி மையத்தில் நடமாடும் 30 மருத்துவ முகாம் மற்றும் மழை நீரின்  தரத்தை ஆய்வு செய்யும் குழுவையும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில், "ஒரு கோடி பொது சுகாதாரத்தில் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதிக்காத வெளி மாவட்டத்தில் இருந்து இவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சுகாதாரத் துறை சார்பில் 260 மருத்துவக்குழுக்கள் செயல்பட்டுவருகிறது. சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106 மருத்துவ குழுக்களும் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டத்தில் 108 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு 250 முதல் 500 கிராம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படும்.

காலை 11:40 - மழையால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

காலை 11:20 - மணிமங்கலத்தில் கர்ப்பிணிகள் இருவர் தங்கயிருந்த வீடு தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது. இதனால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்த அவர்களை, ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான குழு தற்போது மீட்டுள்ளது. மருத்துவக்குழு பரிசோதனைக்குப் பின், படகுகள் மூலம் கர்ப்பிணிகளின் குடும்பம் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காலை 11:05 - ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல், அபிராமம் செல்லும் சாலையில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.

காலை 11:00 - நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை, மகாலட்சுமி நகரில் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது;மழைநீரை கால்வாய்கள் தோண்டி வெளியேற்றும் பணி தீவிரம்.

காலை 10:30 - காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவும்  வருவாய் நிர்வாக ஆணையர்

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment