Advertisment

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர் : எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து LIVE UPDATES

அதிமுக இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிழக கவர்னர் மாளிகையான ராஜ் பவனுக்கு படையெடுத்தனர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
RajBhavan Furniture Scam, Chennai High Court

RajBhavan Furniture Scam, Chennai High Court

அதிமுக இணைப்பு நடவடிக்கையின் அடுத்தகட்ட ரீயாக்‌ஷன் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிழக கவர்னர் மாளிகையான ராஜ் பவனுக்கு படையெடுத்தனர்.

Advertisment

அதிமுக இணைப்பு, அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியுமா? என்கிற அடுத்தகட்ட கேள்வி எழுந்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆகஸ்ட் 21 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கைகுலுக்கி அதிமுக அணிகளை இணைத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஆசனத்திலும் ஓ.பி.எஸ். அமர வைக்கப்பட்டார்.

ttv faction mla's withdraw support, cm edappadi palanisamy டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் வருகையை ஒட்டி ராஜ்பவனில் போலீஸ் பாதுகாப்பு

அதிமுக இணைப்பு நடவடிக்கையை இதோடு விட்டிருந்தால் தற்போதைய அம்மா அணி துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரன் பொறுமை காத்திருக்ககூடும். ஆனால் அணிகள் இணைப்பு முடிந்த அடுத்த நிமிடமே புதிய வழிகாட்டும் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், ‘விரைவில் பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை நீக்குவோம்’ என அறிவித்தார். எனவே ஆட்சியை கவிழ்க்கும் ஆட்டத்திற்கு டிடிவி.தினகரன் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

அதிமுக இணைப்பு வைபவத்தில் பங்கேற்காத 18 எம்.எல்.ஏ.க்கள் அதே 21-ம் தேதி மாலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 22-ம் தேதி ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்திக்க இருப்பதாக அப்போது பேட்டியும் கொடுத்தனர்.

ttv.dhinakaran faction mla's withdraw support, cm edappadi palanisamy ராஜ்பவனுக்கு வந்த டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள்

அப்போது கூறியபடி, ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) காலையில் டிடிவி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேர் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டனர். கடைசி நேரத்தில் இவர்களுடன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரியும் சேர்ந்துகொண்டதால் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 19 ஆனது.

சரியாக காலை 9.50 மணிக்கு அவர்கள் ராஜ் பவனுக்கு வந்து சேர்ந்தனர். முன் தினமே ஆளுனரின் ‘அப்பாய்ன்மென்ட்’டை கேட்டுப் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. டிடிவி.தினகரன் தனக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாக ஏற்கனவே ட்விட்டரில் கூறியிருந்ததால், இந்த சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பான LIVE UPDATES இங்கு...

மாலை 4.00 மணி : மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இரண்டு கேபினட் அமைச்சர்களும், ஒரு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம். அல்லது ஒரு கேபினட், இரு இணை அமைச்சர்கள் பதவி வழங்கப்படலாம் என பா.ஜ.க. மேலிட வட்டாரங்கள் கூறின.

பகல் 2.40 : ‘எங்களது ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் பலர் எடப்பாடி அருகில் இருக்கிறார்கள்’ என சில தினங்களுக்கு முன்பு டிடிவி.தினகரன் கூறியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி.க்கு ஆதரவாக அணிவகுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் எடப்பாடியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 104- ஆக குறையும் சூழல் உருவாகும்.

பகல் 2.30 : இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த கூவத்தூர் ரிசார்ட் முகாமை நினைவு படுத்துவதுபோல,  டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சுமார் 15 பேர் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அருணா இன், லீ பாண்டி ஆகிய இரு ஹோட்டல்களில் இவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன.

பகல் 2.00 : சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை இழந்துவிட்ட எடப்பாடியை மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடும்படி கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

பகல் 1.30 : ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து 233 எம்.எல்.ஏ.க்களை கொண்ட  தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 134 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள். இதனால் எடப்பாடிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 117 எம்.எல்.ஏ.க்களைவிட 3 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த ஆட்சி தொடர முடியுமா? என்கிற விவாதம் சூடு பிடித்தது. ‘சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை இந்த அரசு நிரூபித்து காட்டியாக வேண்டும்’ என சட்ட நிபுணர்கள் மீடியாவில் கருத்து கூறினர்.

பகல் 1.00 : அதிமுக வழிகாட்டும் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி தரப்பால் நேற்று நியமனம் செய்யப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி.யை கட்சியை விட்டு நீக்குவதாக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்தார். ‘விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை நீக்குவோம்’ என அவர் நேற்று பேட்டி கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பகல் 12.30 : முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், எனவே மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

நண்பகல் 12.00 : ‘ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் இல்லை. முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர, இன்னொருவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’ என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறினார். ‘பேச்சுவார்த்தைக்கு எங்களை எடப்பாடி தரப்பு அழைத்தால் செல்வோம்’ என்றும் அவர் கூறினார்.

 பகல் 11.30 மணி : டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக தனித்தனியே ஆளுனர் மாளிகையில் கடிதம் கொடுத்துள்ளனர். ‘முதல்வர் எடப்பாடி, சட்டமன்ற உறுப்பினரான எனது நம்பிக்கையை இழந்துவிட்டார். எனவே அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும்’ என அதில் கூறியுள்ளனர்.

காலை 10.20 : டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தங்கள் கையில் வைத்திருந்த மனுவை ஆளுனர் மாளிகையில் சமர்ப்பித்துவிட்டு, இன்னொரு பாதை வழியாக வெளியேறினர். ஆளுனரின் முதன்மைச் செயலாளரிடம் அவர்கள் மனுவை கொடுத்தார்களா? அல்லது, கவர்னரை சந்தித்தார்களா? என்பது தெளிவு படுத்தப்படவில்லை.

பகல் 10.15 மணி : ஓ.பி.எஸ். ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி.ஆளுனர் மாளிகைக்கு வந்தார். அவரும் என்ன விஷயமாக ஆளுனரை சந்தித்தார் என தெரிவிக்கப்படவில்லை.

காலை 10 மணி : காலை 10 மணிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவின் அப்பாயின்மென்ட் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக கூறினர். ஆனால் அது உறுதிபடுத்தப்பட வில்லை. இவர்களை சரியாக 10 மணிக்கு கவர்னர் மாளிகைக்குள் அழைத்தனர். கையில் தயார் செய்து வைத்திருந்த ஒரு மனுவுடன் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் உள்ளே நுழைந்தனர். அந்த மனுவில் உள்ள விவரங்கள் வெளியே சொல்லப்படவில்லை.

காலை 9.50 மணி : முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் மற்றும் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு வந்திருந்தனர்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment