NDA BJP | INDIA Alliance Congress: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடந்து, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 304 இடங்களும், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 197 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 42 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிட்ட இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்த நிலையில், இந்த கருத்துக் கணிப்பின் உண்மையை தன்மையை "நியூஸ் செக்கர் தமிழ்" இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் வைரல் ஆகிய நிலையில், அந்தப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு (reverse image search) உட்படுத்தி தேடி இருக்கிறார்கள். இந்தத் தேடலில் ‘Modi 3.0 is Mood of the Nation, survey predicts 335 seats for NDA’ என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் உண்மையான கருத்துக்கணிப்பு படம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படத்தில் இந்தியா கூட்டணிக்கு 166 இடங்களும், என்.டி.ஏ கூட்டணிக்கு 335 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 42 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், இந்தியா கூட்டணிக்கு 166 -க்கு பதிலாக 304-ஐயும், என்.டி.ஏ கூட்டணிக்கு 335-க்கு பதிலாக 197-ஐயும் மாற்றி எடிட் செய்து வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான புகைப்படத்தையும் அவர்கள் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்.
இது தொடர்பான கூகுள் தேடலில் இந்தியா டுடேவின் சமூக ஊடகப் பக்கங்களிலும் என்.டி.ஏ கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கும் அதே கருத்துக்கணிப்பு படம் பகிரப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். முடிவில் இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்கள்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு ஃபேக்ட் கிரெசெண்டோ (Fact Crescendo) இணையதளத்தால் செய்யப்பட்டது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“